Vetiver

உச்சி குளிரச்செய்யும் மூலிகை செருப்பு…வெட்டிவேர் மகத்துவம்!

க்கள் மத்தியில் எப்போதுமே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். அதை நிரூபிக்கும் விதமாக அமைந்தது வெட்டிவேர் செருப்பு. கடந்த வாரம், விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெட்டிவேர் கொண்டு தயாரிக்கப்பட்ட செருப்பின்  புகைப்படத்தை பதிவிட்டிருந்தோம். அதனைப் பார்த்த வாசகர்களில் பலர், அதீத ஆர்வத்துடன் அதுகுறித்த விவரங்களை கேட்க துவங்கினர். இதனை அந்த வெட்டிவேர் செருப்பு தயாரிக்கும் ஆனந்திடம் தெரிவிக்க மகிழ்ச்சியில் அதுபற்றி விரிவாக கூறத் தொடங்கினார்.

பழங்கால வைத்தியத்தில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது வெட்டிவேர். குருவேர், உசிர், வீராணம் என பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. வெட்டிவேரானது அனைத்துவகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. பார்ப்பதற்கு கோரைப்புல் போன்ற தோற்றத்தினை கொண்டிருக்கும். இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் வளமாக வளரும் தன்மை கொண்டது. இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் நடலாம். இதன் வேர் கறுப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். மருத்துவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. சருமநோய்களுக்கு தீர்வாகவும், பொருட்களை செய்யவும் பயன்படுகிறது. இந்த வெட்டிவேரானது பல வழிகளில் மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருளாகவும் சமீபகாலமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்காக ‘இந்தியன் வெட்டிவேர் நெட்வொர்க்’ மூலம் வெட்டிவேரை மதிப்புகூட்டி பொருள்களாக விற்பனை செய்து வருகிறேன் என்கிறார் புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த். 

“வெட்டிவேரில் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரியும். அதை பயன்படுத்தி பலவிதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பொம்மைகள், செருப்புகள், மாலைகள், கால்மிதிகள், படுக்கை விரிப்புகள், வாசனை திரவியங்கள், சோப்புகள் என்று 60-க்கும் மேற்பட்ட பல பொருட்கள் தயாரிக்கிறோம். அதுமட்டுமில்லாமல் கழிவுநீரில் உள்ள நச்சு உலோகங்களை நீக்கி நல்ல நீராக மாற்றும் தன்மையும் இந்த வெட்டிவேருக்கு உண்டு. விவசாயத்தைப் பொறுத்தவரை மண் அரிப்பைத் தடுப்பதோடு, நிலத்திலுள்ள விஷத்தன்மையை முறிக்கும் குணமும் இதற்கு இருக்கிறது. வெட்டிவேரில் செருப்பு தயாரிக்கும்போது வேலைப்பளு அதிகமாகத்தான் இருக்கும். ஏனெனில் கைத்தறி மூலம் நெசவு செய்யும்போது தினசரி 3 மீ அளவுக்கே வெட்டிவேரை நெய்ய முடியும். இதில் முதலில் வெட்டிவேரை வாங்கிக்கொண்டு இருக்கும்போது உயரத்துக்கு ஏற்ப பிரிக்க வேண்டும். இதனை நெசவு செய்ய மூன்று நபர்களுக்கு ஒரு நாளைக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் கொடுத்து வெட்டிவேர் செருப்பினை தயார்செய்து சரியாக 400 ரூபாய் என்ற அளவில்  கொடுக்கிறோம். மேலும் இந்த செருப்பானது, உடலின் வேர்வையும், சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதனை பெண்கள் மணத்துக்காக தலையிலும் அணிவதுண்டு. 

சாதாரண செருப்புக்கும் இதற்கும் தரத்தில் எந்தவித்தியாசமும் இல்லை. கடலூரில் வெட்டிவேர் அதிகம் கிடைக்கிறது. இதனை வாங்கி அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். பொதுவா இந்த செருப்பை உபயோகப்படுத்துவதால் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. தற்போது வெட்டிவேர் செருப்பு உட்பட 60-க்கும் மேற்பட்ட பொருட்களை தமிழ்நாடு முழுவதும் வழங்கிக்கொண்டிருக்கிறோம். வெட்டிவேரானது கோவில் கும்பாபிஷேகங்களில் தீர்த்தம் தெளிக்க பயன்படுத்தும் நீரில் ஊறவைத்து பக்தர்கள்மீது தெளிக்கிறார்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மூலிகையாக இந்த வெட்டிவேர் பயன்படுகிறது. ‘இந்தியா வெட்டிவேர் நெட்வொர்க்’ சார்பில் அதிகாரபூர்வமாக தொடக்க விழா வரும் 4-ம் தேதி புதுச்சேரியில் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் நேரில் கலந்துகொள்ளலாம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *